சென்னை: நடப்பாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணைகள் நவம்பர் 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் வளாகத்தில் நேற்று நடந்த தனியார் நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார். பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்றளவும் சென்னையில் வந்து பணிபுரிய வேண்டும் என்று பலருக்கும் கனவாக இருந்து வருகிறது. அடுத்த 5 வருடத்திற்கு என்னென்ன தேவைப்படும் என்பதை வைத்து பள்ளியில் படிக்கும் பொழுதே அவர்களுக்கு பட்டபடிப்பு படிப்பதற்கான யோசனைகளை வழங்கி வருகின்றனர். வேலை கொடுத்தால் மட்டுமே பெற்ற பட்டத்திற்கு மரியாதை.
நவம்பர் 4ம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நடப்பாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாட்டிற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தோராயமாக மே மாதம் தேர்தல் நடைபெறும் என கருதப்படுகிறது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தேர்தல் பணிகளை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
