மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்.19ம் தேதி மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு – ஹில்குரோவ் இடையே 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், ராட்சத பாறைகள் தண்டவாளத்தில் விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதையடுத்து அன்றைய தினம் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
அன்று முதல் நேற்று முன்தினம் வரை மலை ரயில் பாதையில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தீவிரமாக நடைபெற்றது. பணிகள் முழுமையாக நேற்று முன்தினம் இரவு முடிந்ததால் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 184 பயணிகளுடன் 5 நாட்களுக்கு பின்னர் மலை ரயில் உற்சாகமாக புறப்பட்டு சென்றது. முன்னதாக, சுற்றுலா பயணிகள் உலக புகழ்பெற்ற மலை ரயில் முன்பு குடும்பத்தினருடன் செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
