புதுடெல்லி: கேரளாவின் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.2,424.28 கோடி கடன் தர உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், கேரள சுகாதார அமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்காக உலக வங்கியிடமிருந்து ரூ.2,424.28 கோடி கடனுதவி வாங்குவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கேரள சுகாதாரத்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,424.28 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான உலக வங்கியின் செயல் இயக்குநர் பால் ப்ரோசி கூறுகையில், “கேரள மாநிலத்தில் உள்ள முதியோர் மற்றும் நோய் பாதிக்கப்படக்கூடிய மக்களின் ஆயுள்காலம் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவற்கான புதிய திட்டத்துக்கு உலக வங்கியின் நிர்வாக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, பாலக்காடு மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஆற்றல் திறனை மேம்படுத்துவதற்கும், கடுமையான வெப்பம் மற்றும் வௌ்ளத்தை நிர்வகிப்பதற்கும் தீர்வுகளை மேற்கொள்ளும். மேலும், பருவநிலை பாதிப்புகளை தாங்கும் வகையில் விரிவான சுகாதார அமைப்பை உருவாக்கும்” என்றார்.
