சென்னை: நடப்பாண்டுக்கான ஆர்டிஇ மாணவர் சேர்க்கை வரும் 30ம் தேதி நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்தரமோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைவிட விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியுள்ள மாணவர்களின் சேர்க்கை அக்டோபர் 30ம் தேதி நடைபெறும். ஒதுக்கீட்டைவிட அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் முன் குலுக்கல் முறையில் அக்டோபர் 31ம் தேதி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஆர்டிஇ மாணவர் சேர்க்கை செயல்முறை பள்ளிக்கல்வித் துறை வலைத்தளத்தின் மூலம் வெளிப்படையாக செயல்படுத்தப்படுகிறது. இதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் மேற்பார்வையிடுவார்கள். இந்த திட்டத்தில் ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3ம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
