×

கோட்டக்குப்பத்தில் பட்டப்பகலில் துணிகரம் டீ வியாபாரி வீட்டில் பீரோவை உடைத்து பணம் திருட்டு

காலாப்பட்டு, அக். 25: கோட்டக்குப்பத்தில் டீ வியாபாரியின் வீட்டில் பட்டப்பகலில் பீரோவை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் சிராஜ் மில்லத் வீதி முதலாவது தெருவில் வசிப்பவர் காஜா மைதீன் (37). சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருபவர். கடந்த 3 ஆண்டுகளாக மேற்கண்ட வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் காஜா மைதீன், டீ விற்பனைக்கு சென்றார். அவரது மனைவி, பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்காக சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற வாசல் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பெட்ரூமில் இருந்த இரும்பு பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த ரூ.70 ஆயிரம் பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர். விஸ்வநாதன், எஸ்ஐ ராஜூ மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதி வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் கைரேகைகளை வைத்து திருடர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Kottakuppam ,Kalapattu ,first street ,Siraj Millat Road, Rahmat Nagar, Kottakuppam ,Tamil Nadu ,Puducherry… ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்