×

மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்துள்ளது நெல்லை வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மெகா பள்ளங்கள்

*தட்டு தடுமாறும் வாகன ஓட்டிகள்

தியாகராஜ நகர் : நெல்லை வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் மெகா பள்ளங்கள் தோன்றி உள்ளன. அங்கு இருக்கும் 4 மின் கம்பங்களில் விளக்குகள் எரியவில்லை, இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

நெல்லை மாநகரின் போக்குவரத்து நெரிசலை ஓரளவு குறைப்பதற்கு வடக்கு, தெற்கு பைபாஸ் சாலைகள் உதவுகின்றன. புது பஸ்நிலையம் மற்றும் மதுரை உள்ளிட்ட வட மாவட்டங்கள், ராஜபாளையம் பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த சாலை பயன்படுகிறது. இந்த பைபாஸ் சாலை விரிவாக்கம் பணிகள் சமீபத்தில் நடந்தன.

இந்நிலையில் வடக்கு பைபாஸ் சாலையில் தாமிரபரணி ஆற்று பாலத்தின் மேல் உள்ள பகுதியில் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தாமிரபரணியில் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது ஆற்றுப்பாலத்தின் மேல் பகுதி வரை தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதையடுத்து பாலத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ள நிலையில் இந்த பாலத்தில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குகின்றன. சில இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் தடுமாறுகின்றன.

மேலும் பாலத்தின் ஒரு பகுதியில் மட்டும் 4 மின்விளக்குகள் உள்ளன. அதுவும் தற்போது ஒளிர்வதில்லை. இதனால் இரவு நேரத்தில் பாலம் பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. அந்த நேரத்தில் பாலத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

குறிப்பாக இருச்சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதன் அருகே புதிதாக அமைக்கப்படும் பாலம் பணியும் மந்த கதியில் நடைபெறுகிறது. எனவே வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும்.

மேலும் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து பாலத்தின் இரு பகுதிகளிலும் மின்விளக்குகள் அமைப்பதுடன் தற்போது எரியாத மின் விளக்குகளையும் எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பாலப்பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Tamirabarani River Bridge ,Nellai North Bypass ,Thyagaraja Nagar ,Nellai North Bypass Road ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...