×

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பட்டியல் தயாரிப்பதில் குளறுபடி: வசதி படைத்தவர்களுக்கு சலுகைகள் வழங்குவதாக புகார்

திருப்போரூர்: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பட்டியல் தயாரித்ததில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால்,, மீண்டும் புதிதாக வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடக்கிறது. அரசின் முதியோர், விதவை உதவி தொகை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோரின் பட்டியலில் பெயர் இடம்பெற வேண்டும் என்ற விதி உள்ளது.

கடந்த, 2000ம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் பிறகு 20 ஆண்டுகளாக இந்த பட்டியல் புதிதாக தயாரிக்கவோ, புதுப்பிக்கவோ இல்லை. இதனால் முதியோர், விதவை உதவித்தொகை மனுக்கள் பலவும் இந்த பட்டியலில் பெயர் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக குப்பையில் வீசப்பட்டன. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, குடும்ப தலைவிகளின் பெயரில் ஜன்தன் கணக்குகளை வங்கிகளில் தொடங்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி பலரும் தேசிய வங்கிகளில் ஜன்தன் கணக்குகளை தொடங்கினர்.

தற்போது, ஆன்லைன் மூலமாக ஒவ்வொரு ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களில், சிலரை தேர்வு செய்து பட்டியல் தயாரித்து அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. அந்த பட்டியலில் உள்ளவர்கள் இருக்கிறார்களா என தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் மூலம் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதில் பெரும் குளறுபடி நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக, திருப்போரூர்  பேரூராட்சியின் 15 வார்டுகளில் தலா 50 முதல் 80 பேர் வரை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான எந்த அடையாளமும் இல்லாதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1, 2, 3, 5, 8, 13, 15 ஆகிய வார்டுகளில் ஏராளமான ஏழை மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பலர் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், குடிசைகளிலும் வசிக்கின்றனர். ஆனால், இவர்களின் பெயர்கள் இந்த பட்டியலிலும் சேர்க்காமல் அதிநவீன சொகுசு கார் வைத்திருப்பவர்களின் பெயர்களை சேர்த்து, அவர்களது வங்கி கணக்குகள் சரி பார்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருப்போரூர் பேரூராட்சியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் கூறும்போது, பேரூராட்சி நிர்வாகம் வீடு வீடாக வந்து உண்மையானவர்களின் பொருளாதார நிலையை கண்டறிந்து விதவைகள், ஆதரவற்றோர், வீடற்றோர் ஆகியோரை கணக்கிட்டு இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும். அதை விடுத்து அரசியல் கட்சி கொடியை கட்டி கொண்டு காரில் சுற்றுபவர்களை சேர்த்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாவட்டம் முழுவதும் இதில் ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களை மட்டும் சேர்த்திருப்பதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலை மீண்டும் புதிதாக தயார் செய்ய வேண்டும் என்றார்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32,571 பேர்...