×

கிண்டி கத்திப்பாரா சதுக்கத்தை போன்று இரவுநேர பொழுதுபோக்கு ஸ்பாட்டாகிறது வேளச்சேரி பறக்கும் ரயில் சர்வீஸ் ரோடு: இறுதிகட்ட பணிகள் தீவிரம்; அதிகாரிகள் தகவல்

* சிறப்பு செய்தி
தென்சென்னையில் உள்ள முக்கியமான வர்த்தகப் பகுதியாக வேளச்சேரி திகழ்கிறது. இங்கிருந்து சென்னை கடற்கரை வரை எம்ஆர்டிஎஸ் பறக்கும் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த சூழலில் வேளச்சேரியில் இருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை ரயில் சேவையை நீட்டிக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. நடப்பாண்டு இறுதியில் இந்த சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் இருந்து பெருங்குடி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் வரையுள்ள 3 கிலோ மீட்டர் சாலை பெரிதாக பயன்படுத்தப்படாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

ஆங்காங்கே குப்பை கழிவுகள் கொட்டப்பட்டிருக்கும். சில இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படும். மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். இரவு நேரங்களில் பயணிப்பது ஆபத்தானதாக பார்க்கப்படும். இந்த சாலை வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் இருந்து வரும்போது சென்னை சில்க்ஸ் கடைக்கு முன்பாக வலதுபுறமாக ஒரு சாலை திரும்பும். அதில் சென்றால் பெருங்குடி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலை வந்துவிடும். வழக்கமாக வேளச்சேரியில் இருந்து தரமணி சாலை வழியாக சென்று எம்.ஜி.ஆர் சாலைக்குள் நுழைந்து வலதுபுறம் திரும்பினால் பெருங்குடி ரயில் நிலையத்தை அடைய முடியும். ஆனால், இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

எனவே விரைவான, நெரிசலற்ற பயணத்திற்கு எம்ஆர்டிஎஸ் சர்வீஸ் ரோடு உதவுகிறது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இன்றி கிடப்பில் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், மறுசீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி கையில் எடுத்தது. இதற்காக தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் இடத்தை பெற்று திட்டமிடல்களை தொடங்கியது. தற்போது சுமார் ரூ.15 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்து கிடந்த வேளச்சேரி – பெருங்குடி பறக்கும் ரயில் நிலையங்களை இணைக்கும் சாலை இந்த புதிய திட்டத்தின் மூலம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. இந்த சாலையில் தெரு விளக்குகள், சாலையோர கடைகள் அமைக்கும் வகையில் வசதிகள், நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் வசதிகள் இடம்பெற்றுள்ளது. இந்த சாலையில் பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்கும், சிறுவர்கள் ஸ்கேட்டிங் விளையாடுவதற்கும், சைக்கிளிங் பயிற்சி போன்ற உடற்பயிற்சி சார்ந்த நிகழ்வுகளை வார இறுதி நாட்களில் மேற்கொள்வதற்கு வசதியாக மாற்றி அமைக்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் இருக்கைகள், பசுமையான புல்வெளி பரப்புகள் ஆகியவை அமைக்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. கிட்டதட்ட கத்திப்பாரா சதுக்கம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளதோ, அதேபோல் உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தலா 50 சதுர அடியில் 80 கடைகளை இந்த சாலையில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த கடைகள் அனைத்தும் சாலையின் இருபுறமும் இடம்பெறும் வகையில் கட்டப்பட்டு வருகின்றன. அதற்கான நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், 24 மணி நேரமும் கடைகள் அனைத்தும் இயங்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த சாலை இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் போதிய விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் நைட்லைப் பெரிதும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமாக மாற்றும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் சொல்லப் போனால், சென்னையின் இரவு நேர பொழுதுபோக்கு ஸ்பாட்டாக வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் சர்வீஸ் ரோடு மாறும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி வசம் இந்த சாலை ஒப்படைக்கப்பட்ட பின்னர் மீண்டும் புதிதாக சாலை அமைக்கப்பட்டு, சென்டர் மீடியன்கள், நடைபாதைகள், தெரு விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் இந்த சாலை பணிகள் முற்றிலும் முடிவடைந்து பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலையை வார இறுதி நாட்களில் மட்டும் வாகனங்களின் பயன்பாட்டிற்கு அளிக்காமல் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை மாநகர காவல்துறையின் உதவி நாடப்படும். வார இறுதியில் மட்டும் பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படும். நீண்ட நடைபயணம் மேற்கொள்ளலாம். மாணவ, மாணவிகளுக்கு ஸ்கேட்டிங் வகுப்புகள் நடத்தலாம். சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்வதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் பெரிய அளவில் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் இல்லாத நிலையில் இந்த சாலை அந்த இடத்தை நிரப்பும் வகையில் மாற்றப்பட்டு வருகிறது. அடுத்த அண்ணா நகர் போல இந்த வேளச்சேரி – பெருங்குடி சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே வேளச்சேரி -பெருங்குடி பறக்கும் ரயில் பாதையை ஒட்டிய சாலையானது பொதுமக்களுக்கு புத்துணர்ச்சி தரும் செயல்பாடுகளுக்கான வழித்தடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* கல்லுக்குட்டை ஏரியில் படகு சவாரி
பெருங்குடி ரயில் நிலைய சர்வீஸ் சாலையை ஒட்டி அமைந்துள்ள 50 ஏக்கர் கல்லுக்குட்டை ஏரியை மறுசீரமைக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இங்கு படகு சவாரி கொண்டு வரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த 60 அடி ரோட்டில் 5 மீட்டர் இடைவெளியில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். கல்லுக்குட்டை, வேளச்சேரி, பெருங்குடியில் 3 பூங்காக்கள் கட்டமைக்கப்பட உள்ளது. இதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, புதுப்பொலிவு பெறும் வகையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Velachery Flying Train Service Road ,Kathipara Square ,Guindy ,Velachery ,South Chennai ,MRTS ,Chennai Beach ,St. Thomas Mount… ,
× RELATED 13 லட்சம் தீவிர ஊழியர்கள் பணியாற்றும்...