×

கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் கால்வாய் பணிகள் டிசம்பரில் நிறைவடையும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். ஆய்வின்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும முதன்மை செயலாளர் சிவஞானம், மத்திய வட்டார துணை ஆணையர் கவுசிக், கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, சி.எம்.டி.ஏ கண்காணிப்பு பொறியாளர் ராஜன் பாபு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கோயம்பேடு வணிக வளாகத்துக்கு தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றனர். பொங்கல் உள்ளிட்ட அனைத்து பண்டிகை காலங்களில் இதன் எண்ணிக்கை 2 மடங்காக உயர்கிறது. எனவே, இங்கு மழைநீர் தேங்காமல் இருக்க, சாலை மேம்படுத்துதல், சந்தையை மேம்படுத்தும் நோக்கில் 44 கோடி ரூபாய் செலவில் 4 மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் 70 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளது. இந்த பணிகள் முடிந்த பின்னர் தண்ணீர் தேங்கும் பிரச்னை இருக்காது. தற்போது மழை நின்ற பின் டிசம்பர் மாதத்தில் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முடிவடையும். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மாநகராட்சி சார்பில் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நிறைய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளோம். மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காக்க ஓடி கொண்டுள்ளோம். சிறிய, சிறிய சம்பவங்கள் பேசி தீர்க்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags : Koyambedu market ,Minister ,Sekarbabu ,Chennai ,Minister of Charities ,P.K. Sekarbabu ,Koyambedu ,Housing… ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...