கரூர்: விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கில் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ அதிகாரிகள் கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இதே போல், சென்னை உயர்நீதிமன்றமும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்தது. சம்பவம் நடைபெற்ற மறுநாளே கரூர் வந்த ஒரு நபர் ஆணைய தலைவர் அருணா ஜெகதீசன், 2நாள் விசாரணை முடித்து சென்னை திரும்பினார்.
சிறப்பு புலனாய்வு குழுவினர் தங்களின் விசாரணையை தொடர்ந்து நடத்தி வந்தனர். கடந்த 5ம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சிலர், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 13ம் தேதி உத்தரவிட்டது. மேலும், சிபிஐ விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கவும் உத்தரவிட்டது. இந்த குழுவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண், சோனல் வி.மிஷ்ரா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். மேலும், மாதத்துக்கு ஒரு முறை விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவினரிடம் சிபிஐ ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி காலை சிபிஐ அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் கரூர் வந்த ஏடிஎஸ்பி முகேஸ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உட்பட 7 அதிகாரிகள் கொண்ட குழுவினர், கடந்த 17, 18ம் தேதி என 2 நாட்களாக கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியில் முகாமிட்டு இருந்தனர். அப்போது, எஸ்ஐடி குழுவினர் விசாரணை தொடர்பான ஆவணங்களை சிபிஐ குழுவினரிடம் ஒப்படைத்தனர். அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். பின்னர் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்திற்கு சென்ற குழுவினர் காரில் இருந்து இறங்காமல் சுமார் 5 நிமிடம் மட்டும் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து தீபாவளி கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.
இந்நிலையில், 41 பேர் பலியான சம்பவத்தில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினர் தயாரித்து அளித்த ஆவணங்கள், அவர்களின் எப்ஐஆர் பதிவு அடிப்படையில் புதிதாக முதல் தகவல் அறிக்கையை தயாரித்து சிபிஐ குழுவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மனோகரன் கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நீதிபதி சார்லஸ் ஆல்பர்ட் முன்னிலையில் நேற்றுமுன்தினம் மாலை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதன்பின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதன்பின், இந்த வழக்கு மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த41 பேரின் குடும்பங்கள், படுகாயம் அடைந்தவர்களை பயணியர் விடுதிக்கு நேரில் வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விரைவில் விசாரணையை தொடங்குவார்கள் என தெரிகிறது.
