தென்காசி: நர்சிங் கல்லூரி மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேப்பங்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் காவ்யா(18) உள்பட 2 மகள்கள். இதில் காவ்யா, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பில் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாணவி எழுதிய கடிதத்தில், “எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா, என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’’ என உருக்கத்துடன் எழுதி உள்ளார். மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
