×

கர்நாடகா மாநிலத்தின் ‘வாக்கு திருட்டு’ சம்பவம்; இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும்: செல்வப்பெருந்தகை

 

சென்னை: கர்நாடகா மாநிலத்தின் ஆளந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்த ‘வாக்கு திருட்டு’ சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில் தெரிவித்ததாவது; கர்நாடகா மாநிலத்தின் ஆளந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்த ‘வாக்கு திருட்டு’ சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும். முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், கர்நாடகாவின் ஆளந்த் சட்டமன்றத் தொகுதியில் ‘வாக்கு திருட்டை’ ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பலப்படுத்தினார், அதைத் தொடர்ந்து ‘வாக்கு திருட்டு’ ஊழல் குறித்து சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரணையைத் தொடங்கியது.

சிறப்பு விசாரணைக் குழு (SIT) மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு வாக்காளரின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக ரூ.80 வழங்கப்பட்டதாகவும், மொத்தம் 6,018 வாக்காளர்களின் பெயர்கள் போலியாக நீக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. பா.ஜ.க. விற்கு வாக்களிக்காதவர்களின் வாக்குகளை திட்டமிட்டு போலியாக நீக்கியிருக்கிறார்கள். ஒரு தொகுதியில் மட்டும் இத்தனை ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால் முழு மாநிலத்திலும் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கியிருப்பார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. இந்த செயலில் சில பாஜக (BJP) தலைவர்கள் மற்றும் அவர்களது நெருங்கியவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது சாதாரண தவறு அல்ல. இது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பறிக்கும் குற்றச் செயலாகும். ஒரு வாக்கு என்பது மக்கள் குரல், நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் உரிமை. அதை ரூ.80 க்கு கொடுத்து போலியாக நீக்குவது என்பது நாட்டின் மதிப்பிற்பும், ஜனநாயகத்திற்கும் மிகப் பெரிய அவமானம். வாக்கு திருட்டு என்பது மக்கள் குரலை மௌனமாக்கும் குற்றம். இந்த ‘வாக்கு திருட்டு’ முயற்சியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையக கண்டிக்கிறோம். இத்தகைய செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி ஒருபோதும் நடைபெறாதவாறு தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசும் உறுதி செய்ய வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags : Karnataka ,'vote theft' ,Selvapperundhagai ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,vote theft ,Aland assembly ,X ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்