×

ஊட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ளன

ஊட்டி, டிச. 30: நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை அளிக்க ஏதுவாக அனைத்து விதமான உயர் சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். இங்கு தேவையான மருத்துவ கருவிகளும் (வெண்டிலேட்டர், ஹை ப்லோ ஆக்சிஜன் கருவி), உயர் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான விலை உயர்ந்த மருந்துகளும் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. போன்ற வசதிகளும் உள்ளது. கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக 125 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் பிரிவு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா நோய் கண்டறியும் அதிநவீன சுவாச பாிசோதனை கூடம் செயல்படுகிறது. இதன் மூலம் நோயாளிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக பரிசோதிக்கப்பட்டு ஒரே நாளில் முடிவுகள் பெறக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாகவே செய்யப்படுகிறது.  மேலும், சளி, இருமல், காய்ச்சல், உடம்பு வலி, சோர்வு, ருசி மற்றும் வாசனை நுகர்வு தன்மை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறி உள்ளவர்கள், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மேலும், மருத்துவரின் ஆலோசனையின்படி, சுவாச பரிசோதனை செய்து கொண்டு நோய் உறுதி செய்யப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். 2020 ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 1,800 கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஊட்டி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் கண்டறியவும், சிகிச்சை மேற்கொள்ளவும் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. என்றார்.

Tags : Ooty Government Hospital ,facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...