சென்னை: திமுக நெட்வொர்க் தான் உலகத்திலேயே மிகப் பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கை போட்டி போட்டு மக்கள் சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொளும்படி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப்பணிகள் குறித்து திமுகவினருக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவது தொடர்பாக திமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு கட்சி தலைமை அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, சென்னை தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டம், திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையிலும், திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது. இதில், திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர் ஆவடி நாசர், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை, தாம்பரம், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன், கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்கள், மாநகர, நகர, பேரூராட்சி, வட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. களத்தில் திமுக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் அனைத்து தரப்பு அதிகாரிகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
முதல்வர் அறிவுரைப்படி இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் வரக்கூடிய நிலையில் அதற்காக நடைபெறுகின்ற ஒரு ஆலோசனை கூட்டம் என நினைக்க வேண்டாம், அது நிச்சயமாக இல்லை. ஒரு வெள்ளத்திற்கு முன்பும் ஒவ்வொரு பேரிடத்திற்கு முன்பும் இதுபோன்ற பல்வேறு கூட்டங்கள், ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளோம். குறிப்பாக கொரோனா காலத்தில் மக்களுடன் நின்று இருக்கிறோம். அந்த அடிப்படையில் தான் நம் மக்கள் வாக்களித்து நம்மை ஆட்சியில் அமர்த்தி உள்ளார்கள்.
கொரோனா காலத்தில் தலைவர் தான் முன்களப்பணியாளராக முன் நின்று இருக்கிறார். இன்று தைரியமாக பொது மக்களை சந்திக்க போகிறோம் என அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் சொல்லி வருகிறார்கள். அத்தனை பணிகள் இந்த அரசு மேற்கொண்டு உள்ளது. தொடர் மழையால் சில பகுதியில் மழை தேங்கி இருந்தாலும் உடனடியாக பாருங்கள் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
ஏனென்றால் முதல்வரிடம் இதை சென்னால் உடனடியாக இந்த பணிகள் முடிவடையும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் சொல்கிறார்கள். மக்கள் பிரச்னை எப்போது எங்கு இருந்தாலும் திமுக உடன் இருக்கும். இயற்கை பேரிடர்கள் எதுவாக இருந்தாலும் சரி ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி மக்களுடன் முதல்வர் நிற்கிறார். நமக்கு கூடுதல் பெறுப்பு தற்போது இருக்கிறது.
2015ம் ஆண்டு பெரிய மழையாக இருந்தாலும், புயலாக இருந்தாலும் சரி, வர்தா புயலாக இருந்தாலும் சரி பேரிடர் காலத்தில் திமுக முன் களப்பணியாளராக நின்று மக்களை காப்பாற்றியுள்ளோம். நிவாரண பணிகள் வழங்கப்பட்டு மக்களுடன் ஒன்று இருந்தோம் சுழன்று நம் பணி மேற்கொண்டு இருக்கிறோம். தற்போது சோசியல் மீடியா, தொலைக்காட்சிகள் அதிகமாக உள்ளது.
மக்களுக்கு பிரச்னை இருந்தால் களத்திற்கு சென்று உண்மை நிலவரத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் பகுதி மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். மழை காலத்தில் முதியோர்கள் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம். அவர்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. உணவுகள் கூடங்களில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தாழ்வான பகுதிகளில் முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முகாம்களுக்கு வர தயங்கும் மக்களை அழைத்து, அவர்களை முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கும் பொறுப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளது.
மக்களிடம் பேசும் போது கண்ணியத்துடன், கவனத்துடனும் பேச வேண்டும். கவனத்துடன் மக்களை அணுக வேண்டும். திமுக நெட்வொர்க் என்பது தான் உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கை மக்கள் சேவைக்கு பயன்படுத்த வேண்டும். ஒரே நேர் கோட்டில் நாம் செயல்பட்டால் தான் அரசுக்கும், திமுகவுக்கும், முதல்வருக்கும் பெருமை சேர்க்க முடியும். மேயர், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் போன்றவர்கள் மீட்பு பணிகள் மற்றும் முகாம்களை முறையாக கண்காணிக்க வேண்டும்.
நாம் அனைவரும் களத்தில் நிற்க வேண்டும். அதை முதல்வர் கண்காணிப்பார். போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். எத்தனையோ பேரிடர், பெருமழையிலும் மக்களை நாம் காப்பாற்றியுள்ளோம். இந்த மழை காலத்தில் மக்களுடன் நின்று அவர்களை காப்பாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தயார் நிலையில் முகாம்கள், உணவுக் கூடங்கள்- அமைச்சர் கே.என்.நேரு
கூட்டத்தில், திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு பேசுகையில், ‘‘சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கெல்லாம் மழை நீர் பாதிப்புகள் உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். 210 முகாம்கள் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது. 106 இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 4 இடங்களில் உணவு பரிமாறப்பட்டு வருகிறது. 139 மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது. டிராக்டர்கள் 75 இருக்கிறது. 62 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு உணவு உட்கொள்ளும் அளவிற்கு தயார் நிலையில் உணவு கூடங்கள் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சி முகாம்கள், உணவு கூடங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
