×

லாட்டரி சூதாட்டம் கனஜோர் பணத்தை இழக்கும் தொழிலாளர்கள்

ஈரோடு, டிச. 30: அப்பாவி கூலித்தொழிலாளர்களை குறிவைத்து ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சூதாட்டம் கொடிகட்டி பறக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, சித்தோடு, பெருந்துறை உள்பட மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு நம்பர் லாட்டரி, 3 நம்பர் லாட்டரி, கேரள லாட்டரி என பல்வேறு பெயர்களில் லாட்டரி சூதாட்டங்கள் நடக்கிறது. அப்பாவி கூலித்தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த லாட்டரி சூதாட்டத்தில் தினமும் லட்சக்கணக்கில் பணம் கைமாறி வருகிறது.

கீழ்மட்டத்தில் உள்ள போலீஸ் முதல் மேல்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் வரை மாமூல் சரியாக சென்று சேருவதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அவலநிலை ஈரோடு மாவட்டத்தில் நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 3 முறை லாட்டரி குலுக்கல் நடத்தப்படுகிறது. குலுக்கல்கள் என்ற பெயரில், அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்திலேயே இந்த லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டு பல ஆண்டுகளான நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் தடையின்றி வெவ்வேறு பெயர்களில் லாட்டரி சூதாட்டம் கனஜோராக நடப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஈரோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் வள்ளி நாராயணன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இதனால் பல அப்பாவி ஏழை தொழிலாளர்கள் பணம், நகை என இழந்து நடுத்தெருவிற்கு வருகின்றனர். தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தாலும், ஈரோடு மாவட்டத்தில் இருந்து அருகாமையில் உள்ள மாவட்டங்ளுக்கும் லாட்டரிகள் அச்சடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட காவல்துறை நிர்வாகம் இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : Lottery gambling kanajor workers ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...