×

11.48 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியீடு: மிக குறைந்த நாட்களிலேயே வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக இருந்த 4,662 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 12ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை வருவாய் இன்ஸ்பெக்டர், வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட குரூப் 4 பணிகளில் 4,662 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 12ம் தேதி எழுத்துத் தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 5,26,553 ஆண்கள், 8,63,068 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 13,89,738 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் ‘82.61 சதவீதம்) பேர் தேர்வை எழுதி இருந்தார்கள். இதன் மூலம் ஒரு பணியிடத்துக்கு சுமார் 246 பேர் போட்டியிட்டனர்.

தேர்வு முடிவு அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 11.48 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு (2024) குரூப் 4 தேர்வு முடிவுகள் 4 மாதங்களில் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதனைவிட குறைந்த நாட்களிலேயே முடிவுகளை அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்களுடைய தரவரிசை மற்றும் மதிப்பெண்களை www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Tags : TNPSC ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,Tamil Nadu ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து