சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக எல்லா இடங்களிலும் நிவாரண முகாம்கள் தயாராக இருப்பதாகவும், தமிழக அரசு அலர்ட்டாக உள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் சென்னையில் கனமழை விட்டு விட்டு பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் சராசரியாக 5.6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 8.6 செ.மீ, அம்பத்தூரில் 7 செ.மீ மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்கள் குறித்து தொலைபேசியில் பேசும் நபர்களிடம் கேட்டறிந்து, அந்த பகுதிகளில் நிவாரண உதவிகளை உடனடியாக செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: சமூக வலைதளங்கள், போன் மூலம் வரும் புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து, சில பேரிடம் பேசினேன். நானே நேரில் வந்து பார்ப்பதாக சொல்லி இருக்கிறேன். நானும், கமிஷனரும், அதிகாரிகளும் நேரில் செல்கிறோம். டெல்டா மாவட்டங்களுக்கு முதல்வர் அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார். பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். எல்லா இடத்திலும் நிவாரண முகாம்கள் தயாராக உள்ளது. வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தமிழக அரசு அலர்ட்டாக உள்ளது. நேற்று காலை 4 மணி முதல் எந்த பகுதி மக்களுக்கு உணவு தேவையோ அவர்களுக்கு தயார் செய்து கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
