×

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இல்லை : வானிலை ஆய்வு மையம் கணிப்பு!!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று முதல் தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது.

ஆனால் தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடதமிழ்நாடு – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும் என்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று அதிகனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

Tags : Deep Tidal Low Zone ,Bengal Sea ,Chennai ,Tamil Nadu ,southwestern Bengal region ,
× RELATED 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு;...