×

கனமழையை முன்னிட்டு போர்க்கால அடிப்படையில் அரசு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: கனமழையை முன்னிட்டு போர்க்கால அடிப்படையில் அரசு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
அரபிக்கடல் பகுதியிலும், வங்கக்கடல் பகுதியிலும் இரு வெவ்வேறு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு நேற்று அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த முக்கியமான தருணத்தில், வெறும் காணொளி கூட்டங்களோடு நிறுத்திவிடாது, போர்க்கால அடிப்படையில் போதிய முன்னேற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அதேபோல், எத்தகைய பேரிடரையும் சமாளிக்கும் வகையில் திமுக அரசு தயாராக இருக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வரும் வேளையில், பொதுமக்களும் மீனவர்களும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மேலும், மக்கள் நலன் காக்கும் மீட்புப் பணிகளில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தோள் கொடுத்து உறுதுணையாக நின்று களப்பணியாற்றுவோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nainar Nagendran ,Chennai ,Tamil Nadu ,BJP ,Arabian Sea ,Bay of Bengal… ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு