×

ஐசிசி மகளிர் பேட்டிங் தரவரிசை: மந்தனா நம்பர் 1; பந்து வீச்சில் தீப்திக்கு 3ம் இடம்

லண்டன்: மகளிர் ஒரு நாள் போட்டிகளில் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 809 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். மகளிர் ஒரு நாள் போட்டிகளுக்கான, ஐசிசி பேட்டிங் தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 809 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர் 2ம் இடத்தில் உள்ள இங்கிலாந்து கேப்டன் நாட் சிவர்பிரன்ட்டை விட 83 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார்.

தற்போது நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிகளில் கடைசி இரு ஆட்டங்களிலும் மந்தனா அசத்தலாக ஆடி அரை சதங்கள் விளாசினார். ஐசிசி பட்டியலில், ஆஸ்திரேலியா வீராங்கனை ஆலிசா ஹீலி ஒரு நிலை உயர்ந்து 3ம் இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு ஆஸி வீராங்கனை பெத் மூனி மாற்றமின்றி 4ம் இடத்திலும், தென் ஆப்ரிக்கா வீராங்கனை லாரா உல்வார்ட் ஒரு நிலை தாழ்ந்து 5ம் இடத்திலும் உள்ளனர். இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், 3 நிலை உயர்ந்து 15ம் இடத்தை பிடித்துள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் மகளிருக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 3 நிலை உயர்ந்து 669 புள்ளிகளுடன் 3ம் இடத்துக்கு சென்றுள்ளார். இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் 778 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். ஆஸி வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் 686 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் நீடிக்கிறார். இந்த பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ள மற்றொரு வீராங்கனை ஸ்நேஹ் ராணா மட்டுமே. அவர், 527 புள்ளிகளுடன் ஒரு நிலை உயர்ந்து, 20ம் இடத்தில் உள்ளார்.

Tags : ICC ,Mandhana ,Deepti ,London ,Smriti Mandhana ,ICC Women's ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!