ஹைதராபாத்: அரசு பணியார்கள் அவர்களுடைய பெற்றோரை புறக்கணித்தால், அவர்களுடைய சம்பளத்தில் 10 – 15% வரை பிடித்தம் செய்யப்பட்டு, அது நேரடியாக பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தின் அரசு தேர்வாணையம் மூலம் பல்வேறு அரசுத்துறைகளின் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் தேர்வாணையம் மூலம் குரூப் 2 பிரிவுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சியடைந்த 783 பணியாளர்களுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பணி ஆணைகளை வழங்கினார்.
இதற்கான நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ரேவந்த் ரெட்டி; “அரசு ஊழியர்களுக்கு கடமை எவ்வளவு முக்கியமோ அதேபோல குடும்ப வாழ்க்கையும் முக்கியம். பலர் குடும்ப வாழ்க்கையை சரியாக கவனிப்பதில்லை. முக்கியமாக பெற்றோரை கவனிக்காமல் கைவிடும் பழக்கம் அதிகமாக உள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் பெற்றோரை சரியாக கவனிக்க வேண்டும். அப்படி பெற்றோரை கவனிக்காத ஊழியர்களின் சம்பளத்தில் 10% பிடிக்கப்படும்.
பிடித்தம் செய்யப்படும் தொகை சம்பந்தப்பட்ட ஊழியர்களின் பெற்றோர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் அரசு ஊழியர்களை போலவே அவர்களின் பெற்றோரும் மாத சம்பளம் பெறும் நிலை ஏற்படும். எந்த நிலை சென்றாலும் நம் வந்த வழியை மறந்துவிடக்கூடாது. பெற்றோர் தான் உங்களுக்கான ஆணி வேர். உங்களை வளர்ப்பதற்காக அவர்கள் செய்த தியாத்தை மறந்துவிடக்கூடாது.
அரசு ஊழியர்கள் இதை கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில், மசோதா தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ணா மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
