- பாப்பாக்குடி
- Jayankondam
- பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
- பாப்பாக்குடி கிராமம்
- சென்னை கும்பகோணம்...
ஜெயங்கொண்டம், அக்.18: ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்தில் அமைந்துள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அரசு சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி கிராமத்தில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய அரசு நிறுவனம் சார்பில் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அந்நிறுவனம் சார்பில் மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையம் ஆலோசனையின் படி ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மக்களிடையே நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மீன்சுருட்டி கடைவீதியில் நேற்று மாலை நாட்டுப்புற கலைகளான மயிலாட்டம், கரகாட்டம், காவடி மற்றும் நாட்டுப்புற பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கூட்டத்திற்கு பாப்பாக்குடி அலுவலக உதவி பொது மேலாளர் கலைச்செல்வி மற்றும் அலுவலர்கள் சந்தோஷ்குமார், சுரேஷ் பாபு, சுரேஷ் சிட்டூரி, வினோத்குமார் உள்ளிட்ட அனைவரும் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கலை நிகழ்ச்சியில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மீன்சுருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பவர் கிரிட் நிறுவன ஊழியர்கள் செய்து இருந்தனர்.
