தா.பழூர், அக். 18: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இருகையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் வருவாய் துறையினர், தீயணைப்புத்துறையினர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் மூலம் பசுமை தீபாவளி, விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.
மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், பொது இடங்களில் பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் ஒரு பகுதியாக இருகையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி தலைமையில் இனிப்புகள் வழங்கி பட்டாசு பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்புடன் மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்தனர். இதில், ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
