×

செங்கோட்டையன் தரப்பினருடன் மோதல் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்தை அகற்றிய எடப்பாடி ஆதரவாளர்கள்: கோபியில் பரபரப்பு

கோபி: அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் 54ம் ஆண்டையொட்டி கோபியில் எம்ஜிஆர் சிலையின் இருபுறமும் எடப்பாடி ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் பேனர்கள் வைத்திருந்தனர். இதனை அகற்ற செங்கோட்டையன் தரப்பினர் போலீசாரிடம் வலியுறுத்தினர். பேனர்களை அகற்ற எடப்பாடி ஆதரவாளர்கள் மறுக்கவே, செங்கோட்டையன் ஆதரவாளர்களும் சிலை முன்பு பேனர் வைக்க திரண்டனர்.

தனால், இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. பேனருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து, அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டு உள்ளதாக கூறி கோபி நகராட்சி அதிகாரிகள் எடப்பாடி தரப்பினர் வைத்து இருந்த 2 பேனர்களையும் அகற்றினர். இதனால் கோபியில் நேற்று முன்தினம் இரவு முதல் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க எம்ஜிஆர் சிலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை எம்ஜிஆர் சிலைக்கு முதலில் செங்கோட்டையன் மாலை அணித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து சிலைக்கு கீழே வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துக்கும் அவர் மாலை அணிவித்தார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வந்து எம்ஜிஆர் சிலைக்கு கீழே செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வைத்திருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களையும், அலங்காரங்களையும் அகற்றினர். பின்னர் சிலைக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags : Sengottaiyan ,Edappadi ,MGR ,Jayalalithaa ,Gopi ,AIADMK ,General ,Edappadi Palaniswami ,Minister ,K.A. Sengottaiyan ,MLA ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...