சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகமாக கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம் மற்றும் என்.எஸ்.சி. போஸ் ரோடு ஆகிய இடங்களில் கூட்ட நெரிசலில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்,
குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், கூட்ட நெரிசலில் காணாமல் போனவர்களை உடனுக்குடன் கண்டுபிடித்து தரும் வகையிலும், சிறப்பு கட்டுப்பாட்டறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில், கீழ்க்காணும் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர்.
