×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் களைகட்டிய விற்பனை: சென்னை தி.நகர் மக்கள் வெள்ளத்தில் திணறியது இன்று மேலும் கூட்டம் அதிரிக்க வாய்ப்பு

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால் நேற்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீபாவளி இறுதிக் கட்ட விற்பனை களை கட்டியிருந்தது. சென்னையை பொறுத்தவரை முக்கிய வணிக பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக சென்னை மட்டுமல்லாமல் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், பக்கத்து மாவட்டமான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் துணிகள், பாத்திரங்கள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க சென்னைக்கு படையெடுத்து இருந்தனர். நேரம் ஆக, ஆக மக்கள் கூட்டம் அதிகரித்தது.

மாலை 4 மணிக்கு மேல் சென்னை முக்கிய வணிக பகுதிகளான தி.நகர் உஸ்மான் சாலை, பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், ஒரு தெருவை கடக்கவே சில மணி நேரம் ஆனது. அதே போல சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.

தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது. மக்கள் பலர் மின்சார ரயில்களில் பொருட்களை வாங்க வந்ததால் காலையில் இருந்து மின்சார ரயில்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டத்தை சமாளிக்கும் வகையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். பட்டாசு, ஸ்வீட் கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இன்று, நாளையும் மேலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Diwali ,Tamil Nadu ,Chennai T. Nagar ,Chennai ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...