×

கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட நிதிநிலை நிர்வாக பொறுப்புடமை மசோதா மீண்டும் நிறைவேறியது

சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ்நாடு நிதிநிலை நிர்வாக பொறுப்புடமை சட்ட மசோதா 22.2.2024 அன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அது கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி அந்த மசோதா மீது முடிவெடுக்காமல் வைத்திருந்தார். இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி 25.8.2025 தேதியிட்ட கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அதில், பல்வேறு காரணங்களைக் கூறி, நிதிநிலை நிர்வாக பொறுப்புடமை சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். நிதிச் செலவுகளுக்கான அந்த மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால், மீண்டும் அதை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும். எனவே அந்த மசோதாவை மறு ஆய்வு செய்து நிறைவேற்றுவதற்காக மீண்டும் சட்டப் பேரவையில் நேற்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவை சபாநாயகர் அப்பாவு விவாதத்திற்கு அனுமதித்தார். கவர்னருக்கு களங்கம் கற்பிக்காமல் உரையாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி), சதன் திருமலைக்குமார் (மதிமுக) தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), பாலாஜி (விடுதலை சிறுத்தைகள்), ஜி.கே.மணி (பாமக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), டாக்டர் எழிலன் (திமுக) ஆகியோர் விவாதித்தனர்.

அப்போது கவர்னரின் செயல்பாட்டுக்கு கண்டனத்தை பதிவு செய்தனர். அதிமுக, பாஜ கட்சி எம்எல்ஏக்கள் இந்த விவாதத்தில் பங்கேற்கவில்லை. அதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, கவர்னர் எழுதிய கடிதத்தில் உள்ள அவரது கருத்துக்கள் எதுவும் ஏற்புடையதாக இல்லை என்று சட்டசபை முடிவு செய்கிறது.

எனவே அந்த மசோதாவை உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடுகிறேன் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த மசோதாவை மறுப்பவர் யாரும் இல்லை என்பதால் அந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

* தனியார் பல்கலை மசோதா நிறைவேற்றம் தமிழ்நாடு தனியார்
பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்காக தேவைப்படும் நில அளவுகளை குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருந்தார். அதை நேற்று பேரவையில் ஆய்வுக்கு எடுத்தபோது, அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன் இதுகுறித்து பேசினார்.

இதை தொடர்ந்து, அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், ‘‘பக்கத்து மாநிலங்களில் பல்கலைக்கழகங்கள் தொடங்க நில அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளனர். இங்குள்ள மாணவர்கள் இங்கே கல்வி கற்கும் விதத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. இடஒதுக்கீட்டு சட்டமும் அதில் பின்பற்றப்படும்’’ என்றார். அதைத் தொடர்ந்து, இந்த சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Governor ,R.N. Ravi ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...