சென்னை: தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் குடும்பமாக கொண்டாடுவதற்காக, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.இதற்காக ரயில்வே துறை, சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
அதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பல நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகளையும் இயக்க தொடங்கியுள்ளது. அந்த சிறப்பு ரயில்கள், பேருந்துகள் போன்றவைகளில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) முதல் பயணிகள் கூட்டம் கூட்டமாக வெளியூர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ரயில், பேருந்து, கார் போன்றவைகளில் பயணித்தால் பயண நேரம் பல மணி நேரம் ஆவதோடு, போக்குவரத்து நெரிசல்களிலும் சிக்கித் தவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கருதி, பயணிகள் பலர் ஓரிரு மணி நேரத்தில் சொந்த ஊர்களுக்கு பறந்து செல்வதற்காக, விமான பயணத்தை மேற்கொண்டு உள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) முதல் தீபாவளி தொடர் விடுமுறை தொடங்குவதால் நேற்று வெள்ளிக்கிழமையிலிருந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் விமானங்களில் மட்டுமின்றி, வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் அலைமோதுகின்றன.
இதையடுத்து, வழக்கம்போல் சென்னை விமான நிலையத்தில் விமான பயண கட்டணங்கள் ஐந்திலிருந்து ஆறு மடங்கு அளவுக்கு ராக்கெட் வேகத்தில் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இது, பயணிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) டிக்கெட் கட்டணங்கள் 5 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இன்று (சனிக்கிழமை) விமான கட்டணங்கள் மேலும் அதிகமாக உயர வாய்ப்பு உள்ளது. ஆனாலும் பயணிகள் கட்டண உயர்வு குறித்து கவலைப்படாமல், விமானங்களில் தொடர்ந்து பயணம் செய்து வருகின்றனர்.
இப்படி விமான நிறுவனங்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களிடம் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிப்பது, டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து உத்தரவுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது. டெல்லியில் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த 10 தினங்களுக்கு முன்னதாக நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் பண்டிகை காலங்களில் பயணிகளிடம் கூடுதல் டிக்கெட் கட்டணங்கள் வசூலிக்க கூடாது.
அதோடு கூடுதல் விமானங்களை இயக்கி, பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அந்த முடிவை மீறி சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பெரும்பாலான உள்நாட்டு விமானங்களில் கட்டணம் பல மடங்கு ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விமான நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், ‘‘நாங்கள் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தவில்லை. எங்களுடைய விமானங்களில் குறைந்த கட்டண டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாகி விட்டன. எனவே இப்போது உயர்கட்டண டிக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால் அந்த டிக்கெட்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது போல் தெரிகிறது’’ என்றனர்.
* ஒரே நேரத்தில் முன்பதிவுக்கு முயற்சி ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது
சென்னை: வரும் 21ம் தேதி தீபாவளி வருவதால் சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் பலரும் நேற்றில் இருந்தே சொந்த ஊர்களை நோக்கிப் படையெடுக்க தொடங்கிவிட்டனர். இதனால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தில் முயற்சி செய்தனர்.
முன்பதிவு நேரத்தில், ஏராளமான பயணிகள் ஒரே நேரத்தில் இணையதளத்தை அணுகியதால் சர்வர் முழுவதும் முடங்கியது. இதன் காரணமாக அடுத்த 1 மணிநேரத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என இணையதளத்தில் காட்டியது. இது, பண்டிகைக்கு முன் பயணம் திட்டமிடும் பொதுமக்களுக்கு சவாலாக மாறியது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி செயல்படாததால், 5,000க்கும் மேற்பட்ட பயனர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சிக்கல் என புகார் அளித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில், விரக்தியடைந்த பயனர்கள் “site down” மற்றும் “error” செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து கொண்டனர், சிலர் இந்த அமைப்பு மீண்டும் ஆன்லைனில் வரும் நேரத்தில், பல பிரபலமான ரயில்களுக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிடும் என்று புகார் கூறினர். மேலும், பண்டிகை முன்பதிவு காலங்களில் ஐஆர்சிடிசி இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்வது இது முதல்முறை அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சர்வர் பிரச்னை தீர்ந்தது.
