தர்மபுரி, அக்.18: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகேயுள்ள நத்தஅள்ளி கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பூசாரியாக காளியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை கோயிலுக்கு வந்தார். அப்போது கோயிலுக்குள் ஜன்னல் அருகே இரும்பு டேபிள் மீது வைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இரவு நேரத்தில் மர்மநபர்கள் ஜன்னல் கம்பியை நெம்பி, உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.3 ஆயிரத்தை திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி பூசாரி காளியப்பன் இண்டூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
