×

தமிழக-கேரளா எல்லையில் காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி 2 குழந்தைகள் கவலைக்கிடம்

அருமனை,அக்.17: தமிழக- கேரளா எல்லை பகுதியான அம்புரியில் காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குமரி மாவட்டத்தை ஒட்டிய கேரள பகுதியில் தற்போது பிரபலமாகி வரும் சுற்றுலாத்தலமான கும்பச்சல்கடவு பாலம் பகுதியை சேர்ந்தவர் மோகனன் காணி. இவர் தனது மனைவி சாவித்ரி, மகன் அருண், மருமகள் சுமா மற்றும் பேர பிள்ளைகள் அபிஷேக் (11) மற்றும் அனஸ்வரா (14) ஆகியோருடன் ஒன்றாக வசித்து வருகிறார்.நேற்று காலை காட்டில் இருந்து சேகரித்து வந்த காளான்களை அவர்கள் சமைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியினர் அவர்கள் 6 பேரையும் காரக்கோணம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுமாவைத் தவிர மற்ற அனைவரும் மயக்கமடைந்திருந்ததாக நெய்யார் டாம் போலீசார் தெரிவித்தனர். 6 பேரும் தற்போது காரக்கோணம் தனியார் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் அபிஷேக் மற்றும் அனஸ்வராவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து நெய்யார் டாம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tamil Nadu-Kerala border ,Arumanai ,Amburi ,Tamil Nadu-Kerala ,Mohanan Kani ,Kumbhachalkadavu bridge ,Kerala ,Kumari district.… ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா