×

திருவள்ளூர், ஊத்துக்கோட்டையில் சனி பெயர்ச்சி விழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி கிராமத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5.22 மணிக்கு சனிஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியானார். இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிமுதல் விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பள்ளிகொண்டீஸ்வரர், சர்வமங்களா ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் 6 மணிக்கு வால்மீகேஸ்வர சுவாமிக்கு தைலாபிஷேகம் நடந்தது. மேலும், கோயில் வளாகத்தில் 9 அடி உயர சனிபகவானிடம் பக்தர்கள் அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகள் செய்தனர். முன்னதாக, நவகிரகங்களுக்கு விசேஷ அபிஷேகமும், கலச அபிஷேகம் மகாதீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இதேபோல், தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள மகா கால பைரவர் கோயிலில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு கால பைரவர், விநாயகர், முருகன், வள்ளி - தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நவகிரகம் மற்றும் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்காநகர் ஸ்ரீயோக ஞான தட்சிணாமூர்த்தி பீடத்தில் ஸ்ரீஞான மங்கள சனீஸ்வர பகவான் சன்னதியில் நேற்று காலை சனிப்பெயர்ச்சி பரிகார மஹா யாகம் நடைபெற்றது.

இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீஞான மங்கள சனீஸ்வர பகவான் குருவின் நேர் பார்வையில் அமைந்திருப்பதால் சனீஸ்வர பகவான் உக்கிரம் குறைந்து ஆசீர்வாதம் செய்வதைப்போல் கை அமர்த்தி அனுக்கிரஹ மூர்த்தியாக ஆசியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பு. இதனால் இங்கு பரிகாரம் செய்தால் அஷ்டம சனி, கண்ட சனி, விரய சனி என எல்லா சனியிலும் உள்ள சங்கடங்களும் நிவர்த்தியாகி நல்லதே நடக்கும் என்பது ஐதீகம். இந்த சனி பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் வேத சிவ ஆகம ஜோதிட சிரோன்மணி என்.வெங்கட்ராம சிவாச்சாரியார் ஏற்பாடு செய்திருந்தார்.

Tags : Saturn ,shift ceremony ,devotees ,Uthukottai ,Tiruvallur ,
× RELATED சனி பிரதோஷ வழிபாடு