×

பெருங்குளத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் தேங்கிய பள்ளத்தால் விபத்து அபாயம்

ஏரல், டிச. 28:  ஏரல் அருகே மங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக குழாய்கள் பதித்து பெருங்குளம் வழியாக  தூத்துக்குடிக்கு  தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் சாயர்புரம் கூட்டு குடிநீர் திட்டம், நட்டாத்தி உட்பட கிராம ஊராட்சி பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் பெருங்குளம் பேரூராட்சி அருகில் ஏரல், பண்டாரவிளை, சிவகளை செல்லும் மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில் குழாயில் உடைந்து தண்ணீர் ெவளியேறுகிறது. சாலையில் தண்ணீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றனர்.

மேலும் இந்த குடிநீர் குழாய் உடைந்து ஒருவருடத்திற்கு மேலாகிறது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைப்பதுடன், அங்கு ஏற்பட்டுள்ள பள்ளத்தையும் சீரமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பெருங்குளம் நகர திமுக செயலாளர் சுடலை கூறுகையில், பெருங்குளத்தில் மூன்று சாலைகள் சந்திக்கின்ற இந்த இடத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒருவருடத்திற்கு மேலாகிறது. இதுவரை சீரமைக்கப்படவில்லை. எப்போதாவது அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைத்து செல்கின்றனர். ஆனால் மறுநாளில் மீண்டும் அங்கு உடைப்பு ஏற்பட்டு மீண்டும் தண்ணீர் தேங்குகிறது. எனவே அதிகாரிகள் அங்கு மீண்டும் உடைப்பு ஏற்படாதவாறு தரமான குழாய்களை பதிக்க வேண்டும் என்றார்.

Tags : accident ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...