கட்சிரோலி: மகாராஷ்டிராவில் ரூ. 6 கோடி தலைக்கு விலையிடப்பட்ட நக்சல் இயக்கத்தின் முக்கிய தளபதி, 60 பேருடன் சரணடைந்தது பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் மத்தியக் குழு மற்றும் பொலிட்பீரோ உறுப்பினராகவும், கடந்த 2011ல் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மூத்த தலைவர் கிஷண்ஜியின் சகோதரருமான மல்லோஜுலா வேணுகோபால் ராவ் என்கிற பூபதி (70), தனது ஆதரவாளர்கள் 60 பேருடன் மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசில் சரணடைந்தார். சோனு தாத்தா, மாஸ்டர், விவேக், அபய் எனப் பல புனைப்பெயர்களைக் கொண்ட இவர், தெலங்கானாவை சேர்ந்த பி.காம். பட்டதாரி ஆவார்.
நக்சல் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக விளங்கிய இவர், கடந்த 2010ம் ஆண்டு தண்டேவாடாவில் 76 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட கொடூரத் தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டதாகக் காவல்துறையினரால் சந்தேகிக்கப்படுபவர். இவரது தலைக்கு ரூ. 6 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. நக்சல் அமைப்பின் தளபதியான பூபதியின் இந்த திடீர் சரணடைவுக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக, ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்து வருவதையும், மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதையும், அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதையும் உணர்ந்து அவர் இயக்கம் மீது கொண்ட நம்பிக்கையை இழந்துள்ளார். மேலும், கடந்த மே மாதம் பொதுச் செயலாளர் பசவராஜு இறந்த பிறகு, அந்தப் பதவி தனக்குக் கிடைக்காமல் தேவுஜி என்பவருக்கு வழங்கப்பட்டது அவருக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவதாக, மகாராஷ்டிராவின் சி-60 கமாண்டோக்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக கட்சிரோலி, அபுஜ்மத் போன்ற பகுதிகளில் பதுங்கியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் என்கவுன்ட்டர்களால் சோர்வடைந்ததும், என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுவிடுவோமோ என்ற அச்சமும் அவரை சரணடைய வைத்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வுக் கொள்கை மீது ஏற்பட்ட நம்பிக்கையும், முன்னாள் தோழர் ஒருவர் எழுதிய உருக்கமான கடிதமுமே அவரை இந்த முடிவை எடுக்கத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
