×

தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேருங்கள் விளையாட்டு துறைக்கு இதுவரை ரூ.1,945.7 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 நிறைவு விழாவில், முதலிடத்தை பெற்ற சென்னை மாவட்டம், இரண்டாம் இடத்தை பெற்ற செங்கல்பட்டு மாவட்டம், மூன்றாம் இடத்தை பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் ‘கோல்டன் ஏஜ்’-ஆக திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. திறமையாளர்கள் எங்கு இருந்தாலும் அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால்தான், பள்ளி, கல்லூரி மாணவர்கள் – மாற்றுத் திறனாளிகள் – பொதுமக்கள் – அரசு ஊழியர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்வது போன்று, முதலமைச்சர் கோப்பையை வடிவில் செய்தோம்.

கடந்த அதிமுக ஆட்சியின் ஐந்து ஆண்டு காலத்தில், விளையாட்டுத் துறை உட்கட்டமைப்புக்காக, ரூ.170.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில், ரூ.601.38 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறோம். ஒட்டுமொத்தமாக, விளையாட்டுத் துறைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி எவ்வளவு தெரியுமா? ஆயிரத்து 945 கோடியே 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறோம்.

இந்த சமயத்தில், கலைஞர் சொன்ன ஒரு விஷயம் என்னுடைய ஞாபகத்திற்கு வருகிறது. நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, ஏராளமான பணிகளை, முன்னெடுப்புகளை நாள்தோறும் செய்வதைப் பார்த்து, ஒரு விழாவில் பேசிய கலைஞர், என்னுடைய துறையில் செய்யப்பட்டு வந்த சாதனைகளை பட்டியலிட்டு பேசி, “நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது என்று சொன்னார்.

இன்றைக்கு அதே ஏக்கம் எனக்கும் வந்திருக்கிறது. நானே விளையாட்டுத் துறையையும் கவனித்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. காரணம் உதயநிதியின் பணிகள் அப்படி இருக்கிறது. உங்களுக்கான அத்தனை வாய்ப்புகளையும் நாங்கள் நிச்சயம் உருவாக்கித் தருவோம்.

நீங்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி முறையாக பயிற்சி செய்து, உங்கள் திறமையால் தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேருங்கள். உங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு முதலமைச்சராக நானும் இருக்கிறேன். உங்கள் துறையின் அமைச்சரான துணை முதலமைச்சர் உதயநிதியும் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் உங்கள் சாதனை பயணம் தொடர வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

Tags : Tamil Nadu ,India ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Chief Minister Cup Games 2025 ,Jawaharlal Nehru Inland Sports Stadium ,Chennai, Chennai ,Chengalpattu district ,Coimbatore district ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு