×

மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல்வரிடம் சமர்ப்பிப்பு

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளான, ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தாக்க மதிப்பீடு’, ‘நான் முதல்வன் திட்டத்தின் மதிப்பீட்டாய்வு’, ‘தமிழ்நாட்டில் புத்தொழில் துவக்கத்திற்கான சுற்றுச்சூழல் அமைப்பு’, ‘வாய்ப்புகள் மற்றும் சவால்கள் -தமிழ்நாடு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதிக் கொள்கை மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நகரிய மேம்பாட்டுக் கொள்கை’ ஆகியவற்றை துணை முதலமைச்சரும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணை தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் சமர்ப்பித்தனர்.

அறிக்கைகளின் சில முக்கிய அம்சங்கள்

* கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தாக்க மதிப்பீடு
இத்திட்டத்தின் செயல்பாடு, சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினரை சென்றடைந்துள்ளது. இத்தொகையை பெரும்பாலும் மருத்துவச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்துகின்றனர். உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

* நான் முதல்வன் திட்டத்தின் மதிப்பீட்டாய்வு
75 சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு தேவையான நடைமுறை, சுய விவரங்கள் தயாரிப்பு மற்றும் தொழில் சார்ந்த திறன்களை பெற்றுள்ளதால், தொழில் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு தேர்வுகளை, நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். பணியில் சேரும் மாணவர்களின் தொழில் கற்றல் திறன் “நான் முதல்வன்” திட்டத்தின் காரணமாக மேம்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் புத்தொழில் துவக்கத்திற்கான – சுற்றுச்சூழல் அமைப்பு: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்
தமிழ்நாட்டில் புத்தொழில்கள் தொடக்கத்திற்கான சுற்றுச்சூழல் அமைப்பு ஸ்டார்ட் அப் டிஎன் என்னும் இயக்கத்தின் மூலம் வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால், அதன் திறனை முழுமையாக செயல்படுத்த நமது மாநிலம் அதற்கென போதிய விழிப்புணர்வு மற்றும் ஆதரவுத் திட்டங்களுக்கான அணுகலை மேம்படுத்தி நிதி செயல்முறைகளை எளிதாக்க வேண்டும்.

* தமிழ்நாடு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதிக் கொள்கை மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நகரிய மேம்பாட்டு கொள்கை
அனைத்து நகர்ப்புற வசதிகளுடன் கூடிய நன்கு திட்டமிடப்பட்ட, வளங்குன்றா நகரியங்களை உருவாக்க தனியார் துறை முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் தரங்களை உயர்த்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. குடியிருப்பு, வணிக, கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான உட்கட்டமைப்பு, பயன்பாடுகள், திறந்தவெளி பசுமையிடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

மேலும், இக்கொள்கை, நகர்ப்புற விரிவாக்கத்தில் ஏற்படும் இடர்களை நீக்குதல், மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய தொலைநோக்கு பார்வையைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், மற்றும் மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலர் சுதா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : State Planning Committee ,Chennai ,Chennai Secretariat ,Tamil Nadu ,
× RELATED இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்