×

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பு

 

நாமக்கல்: தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடித்தது.
நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இந்த எண்ணெய் நிறுவனங்கள், கடந்த மார்ச் மாதம் அறிவித்த புதிய டெண்டரில் பங்கேற்ற 3,500 லாரிகளில், 700 வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நேற்று 5வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில், சுமார் 5 ஆயிரம் காஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொச்சி, மங்களூரு, பாலக்காடு, தூத்துக்குடி, சென்னை, அனந்தபூர், விசாகபட்டணம் ஆகிய இடங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, கடந்த 5 நாட்களாக சமையல் எரிவாயு லோடு லாரிகளில் ஏற்றப்படவில்லை. இதுகுறித்து, தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் கூறுகையில், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் சட்ட விரோதம், அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் எங்கள் தரப்பு நியாயமும் தெரிவிக்கப்படும். நீதிமன்ற உத்தரவை பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Tags : Gas Tanker Trucks Strike ,Tamil Nadu ,Namakkal ,Tanker Truck Strike ,Indian Oil Corporation ,Bharat Petroleum Corporation ,Hindustan Petroleum Corporation ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்