சனிப்பெயர்ச்சி விழா குமரி சிவாலயங்களில் பக்தர்கள் குவிந்தனர்

நாகர்கோவில், டிச.28: சனிப்பெயர்ச்சியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் நேற்று ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை 5.22க்கு, சனீஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார். சனிப்பெயர்ச்சியையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நவக்கிரகங்களில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் வடசேரி தழுவிய மகாதேவர் கோயில், சோழ ராஜா கோயில், காசி விஸ்வநாதர் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு சிவாலயங்களில் உள்ள சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். எள் விளக்கு ஏற்றி சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.

ஈத்தாமொழி அருகே உள்ள இலந்தையடிதட்டில் உள்ள தென்காளகஸ்தி சிவன் கோயிலில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தன. வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா தொடங்கி வைத்தார். ஊராட்சி தலைவர் ரெங்கநாயகி, முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர். கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ருத்ரா மகர சனீஸ்வரயாக பூஜைகளும், 16 வகை அபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சனிப்பெயர்ச்சியையொட்டி பரிகார பூஜைகள் செய்து, பக்தர்கள் வழிபட்டனர்.

Related Stories:

>