×

சாலை விபத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.28 லட்சம் நிதிஉதவி

தஞ்சை, டிச.28: சாலை விபத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்துக்கு, 2013ம் ஆண்டு காவல் துறையில் தேர்வான சக காவலர்கள் தமிழகம் முழுவதும் ரூ.28 லட்சம் நிதி திரட்டி அந்த நிதியை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேற்று வழங்கினர். தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் மோசஸ் மோகன்ராஜ்(29). இவர் கடந்த ஆக.21ம் தேதி தஞ்சாவூருக்கு பைக்கில் வந்தபோது மணல் லாரி மோதி அதே இடத்தில் இறந்தார். இதனால் மோசஸ் மோகன்ராஜின் மனைவி இசபெல்லா, இரண்டரை வயது பெண் குழந்தை மற்றும் பெற்றோரும் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த சம்பவம் மோசஸ் மோகன்ராஜூடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து 2013-ம் ஆண்டு காவல் துறையில் காவலர்களாக தேர்வானவர்களிடம் நிதியை திரட்டி பாதிக்கப்பட்ட மோசஸ் மோகன்ராஜ் குடும்பத்துக்கு வழங்குவது என முடிவு செய்தனர். இதற்கிடையில் அதே பேட்ஜில் தேர்வான தருமபுரி செந்தில்குமார் சாலை விபத்திலும், தூத்துக்குடி சத்தியலட்சுமி மாரடைப்பாலும் இறந்ததால், அவர்களின் குடும்பத்துக்கும் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 2013-ம் ஆண்டு பேட்ஜ் காவலர்களிடம் நிதியாக ரூ.28 லட்சம் திரட்டப்பட்டது. திரட்டப்பட்ட நிதியில் ஒரு பகுதியாக ரூ.8.15 லட்சத்தை நேற்று தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் தெருவில் உள்ள மோசஸ் மோகன்ராஜ் மனைவியிடம், சக காவலர்கள் வழங்கி, அவரது ஆன்மா சாந்தியடைய இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதை போல் தூத்துக்குடி சத்தியலட்சுமி மற்றும் தருமபுரி செந்தில்குமார் குடும்பத்துக்கும் நேற்று அந்தந்த பகுதியில் உள்ள 2013 வது ஆண்டு பேட்ஜ் காவலர்கள் திரட்டிய நிதியை பிரித்து வழங்கினர்.

Tags : policeman ,road accident ,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு