×

புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர் நள்ளிரவில் கைது

 

புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில் பேசிய ஒரு மாணவி தன்னை பேராசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், அதேபோல வாட்ஸ் அப் மூலம் நிர்வாண படங்களை அனுப்ப சொல்லி மிரட்டுவதாகவும், அப்படி அனுப்பவில்லை என்றால் தனது இண்டர்னல் மார்க்கை குறைத்து விடுவேன் என்று மிரட்டுவதாக அழுதுகொண்டே மாணவி வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்புகாரை பல்கலை நிர்வாகம் மறுத்து அறிவிப்பு வெளியிட்டது. அதில் ஆத்திரமடைந்த பல்கலை மாணவர்கள் நேற்று மதியம் 2.30 மணியளவில் பல்கலை நிர்வாக கட்டடத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் துணைவேந்தர் பிரகாஷ்பாபு, பதிவாளர் ராஜ்னீஷ் புட்டானி வெளியேற முடியாமல் உள்ளே சிக்கினர். அதே வேளையில் நிர்வாக கட்டடத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களை வெளியேற மாணவர்கள் தடங்கல் செய்யவில்லை. மதியம் 2.30 மணிக்கு துவங்கிய இப்போராட்டம் நள்ளிரவு வரை நீடித்ததால் பரபரப்பு நிலவியது. அப்போது போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர் நள்ளிரவில் கைது செய்தனர். பேராசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக நிர்வாகம் மூடி மறைப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Central University ,Puducherry ,Central University of Puducherry ,Tamil Nadu ,Kerala ,Andhra Pradesh ,Madhya Pradesh ,
× RELATED தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு நாளை...