வேலூர், அக்.10: வேலூர் மாவட்டத்தில் இதுவரை மேற்கொண்ட களஆய்வுகளில் 939 மனுக்களில் 271 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சிறுபான்மையினருக்கான கலந்தாய்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஆணைய தலைவர் அருண் தலைமை தாங்கினார். கலெக்டர் சுப்புலட்சுமி, எஸ்பி மயில்வாகனன், ஆணைய துணைத்தலைவர் அப்துல்குத்தூஸ் என்ற இறையன்பன் குத்தூஸ் மற்றும் உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், டிஆர்ஓ மாலதி, மேயர் சுஜாதா மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, 60 பயனாளிகளுக்கு ரூ.8.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பின்னர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் இதுவரை 34 மாவட்டங்களில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. 35வது மாவட்டமாக வேலூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 939 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 271 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மற்றும் தீர்வு காண முடியாத மனுக்களின் மீது அறிக்கையாக அரசிற்கு அனுப்பப்பட்டு அதன் மீது கொள்கை முடிவுகள் எடுக்க ஆணையத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இன்று(நேற்று) நடைபெற்ற இந்த களஆய்வில் சிறுபான்மையின மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதில், கல்லறை தோட்டம், கபர்ஸ்தான் ஆகியவற்றிற்கு இடங்கள் கேட்டு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியிடங்கள் நிரப்புவதில் தாமதம் இருப்பதாகவும், வக்பு சொத்துகளை ஆக்கிரமித்து, விற்பனை செய்யப்பட்டதாக வந்த புகாரின் பேரில் வக்பு போர்டு கலைக்கப்பட்டுள்ளது. தலைமை அதிகாரிகள், இதுகுறித்து பதிலளிக்க ஆணையம் கேட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் புத்தகம் தாமதம் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். சிறுபான்மையினர் இருக்கும் பகுதிகளில் போதை பொருட்களின் நடமாட்டம் தடுக்க கலெக்டர், எஸ்பி எடுக்கப்படும் நடவடிக்கைகள் விரிவாக கூறினர்.
நிலுவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைப்பதற்கு தடையின்மை சான்றை, மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் மூலமாக ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பவுத்த மதத்தினர் தாங்கள் புத்தரை வணங்குவதற்காக புத்த விகார் அமைக்க அரசின் சார்பில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இதற்கான தகுந்த இடத்தை ஆய்வு செய்து வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள குறிப்பாக வேலூரில் உள்ள சமணர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடுகாடு பகுதியை பண்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கார்த்திகேயன் எம்எல்ஏ, அந்த இடத்தை மேம்படுத்துவதற்காக ஏற்கனவே எம்எல்ஏ ரூ.40 லட்சம் ஒதுக்கி அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
