புதுடெல்லி: கணவர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து பெற்ற விவாகரத்தை விழாவை போல கொண்டாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக, விவாகரத்தைக் கொண்டாடும் நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை மாதம், ஜீவனாம்சம் ஏதும் செலுத்தாமல் விவாகரத்து வழக்கில் வெற்றி பெற்ற தனது நண்பரின் கொண்டாட்டம் குறித்து ரெட்டிட் பயனர் ஒருவர் பகிர்ந்தது விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது மற்றொரு சம்பவம் இணைந்துள்ளது.
பிராதர் டி.கே. என்ற இன்ஸ்டாகிராம் பயனர், தனது விவாகரத்தைக் கொண்டாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவரது தாய் அவருக்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற சடங்கைச் செய்கிறார். அதனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்கள் ஆரவாரிக்க, ‘மகிழ்ச்சியான விவாகரத்து’ என எழுதப்பட்ட கேக்கை அவர் வெட்டுகிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தயவுசெய்து மன அழுத்தத்தில் இருக்காதீர்கள், உங்களைக் கொண்டாடுங்கள். 120 கிராம் தங்கம் மற்றும் 18 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக வாங்கவில்லை, கொடுத்தேன். தற்போது தனிமையில் இருக்கிறேன்; மகிழ்ச்சியாக இருக்கிறேன், சுதந்திரமாக இருக்கிறேன்.
என் வாழ்க்கை, என் விதிகள், தனிமை மற்றும் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் நேர்மறையாகவும், எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சிலர், விவாகரத்துக்குப் பிறகும் நம்பிக்கையுடன் இருக்கும் அவரது மனப்பான்மையைப் பாராட்டினாலும், பலரும் விவாகரத்தைக் கொண்டாடுவது சரியான முறையல்ல என்று விமர்சித்து வருகின்றனர்.
