×

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி காலணி வீசிய வடமாநில கைதி

வீரவநல்லூர்: சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி காலணி வீசிய வடமாநில கைதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ரவுண்டானா அருகில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது. இங்கு நீதிபதியாக அருண்சங்கர் பணியாற்றி வருகிறார். உண்டியல் திருட்டு வழக்கு தொடர்பாக கைதாகி பாளை.

மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மத்தியபிரதேச மாநிலம், ரிவா மாவட்டத்தை சேர்ந்த நரேஸ் சிங் மகன் திரேந்தர் சிங்(29) என்பவரை போலீசார் சேரன்மகாதேவி நீதிமன்றத்திற்கு நேற்று பிற்பகல் 1 மணிக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். அப்போது நீதிபதி அருண்சங்கர் வழக்கை வேறு தேதிக்கு ஒத்தி வைத்தார். இதையடுத்து திரேந்தர் சிங், திடீரென தனது காலணியை கழற்றி நீதிபதியை நோக்கி வீசினார்.

ஆனால் காலணி நீதிபதியின் முன்புள்ள கணினியில் பட்டு கீழே விழுந்தது. இந்த திடீர் சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திரேந்தர் சிங் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். வக்கீல்கள் அவரை விரட்டிப் பிடித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கோர்ட் வளாகத்தில் இருந்த செல்லில் திரேந்தர் சிங்கை அடைத்தனர்.

பின்னர் சேரன்மகாதேவி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். நீதிபதியை நோக்கி காலணி வீசியதற்காக அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து மீண்டும் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைதான திரேந்தர் சிங் மீது கன்னியாகுமரி, கடையம், பாவூர்சத்திரம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

Tags : Northern State ,Cheranmahadevi court ,Veeravanallur ,District Civil and Judicial Arbitration Court ,Cheranmahadevi ,Nellai district ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...