- சத்துராஜகிரி கோவில்
- புரட்டாசி பௌர்ணமி
- சிவகங்கை
- வத்திராயிருபு
- இறைவன்
- சத்திரகிரி சுந்தராமகாலிங்கம்
- கோவில்
- மேற்குத்தொடர்ச்சி
- சப்தூர்
- மதுரை மாவட்டம்
*சிவகங்கை பக்தர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
வத்திராயிருப்பு : புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது.
பிரசித்திபெற்ற இக்கோயிலில் பக்தர்கள் மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் தற்போது தினமும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை அடிவாரத்தில் பக்தர்கள் குவிந்தனர். காலை 6 மணிக்கு பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனை செய்து மலையேற அனுமதித்தனர். காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி மற்றும் கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் செய்திருந்தனர். வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் சதுரகிரி மலை நீரோடை பகுதிகளில் சிறிதளவு நீர்வரத்து உள்ளது. எனவே ஓடை பகுதிகளில் வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிவகங்கை தென்கரையை சேர்ந்தவர் மகா (55). இவர் நேற்று சதுரகிரி மலையில் சின்னபசுக்களை பகுதி அருகே நடந்து சென்றபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் டோலி மூலம் அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
