×

பணம் கேட்டு மிரட்டியவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி கோட்டாறு காவல் நிலையம் முன் பொதுமக்கள் திடீர் போராட்டம் போலீஸ் பேச்சுவார்த்தை

நாகர்கோவில், அக்.7: நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம், வசந்தம் நகர் பகுதியில் உள்ள பட்டியலின மக்களிடம் நல வாரியத்தில் சேர வேண்டும் எனக் கூறி கட்டாயமாக பண வசூலில் ஈடுபட்டதுடன், பணம் கொடுக்க மறுத்தவர்களை ஜாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் மலவிளை பாசி உள்ளிட்டோர் தலைமையில் கோட்டார் காவல் நிலையம் முன் திரண்டனர்.

ஏற்கனவே இந்த பிரச்னை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு முறையாக விசாரணை நடத்தி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி உத்தரவு வந்தும் கோட்டார் போலீசார் தாமதம் செய்து வருகிறார்கள். எனவே உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கூறினர். இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் மற்றும் போலீசார் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக கலைந்து செல்வதாக கூறி அவர்கள் சென்றனர். இந்த சம்பவத்தால் கோட்டாறு காவல் நிலையம் முன் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Kottar police station ,Nagercoil ,Ootu Vazhamadam ,Vasantham Nagar ,Welfare Board ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா