×

சிவகங்கை மாவட்டத்தில் குறைந்த நீரில் என்ன பயிரிடலாம்?

சிவகங்கை, டிச.26: சிவகங்கை மாவட்டத்தில் குறைந்த நீர் தேவையுள்ள மாற்றுப்பயிர் விவசாயம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் விவசாயத்தை மட்டுமே முக்கிய தொழிலாக கொண்டுள்ள பகுதியாகும். ஆனால் அதிக நீர் தேவையுள்ள பயிர்களான நெல், கரும்பு உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயிகள் கடும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. சிவகங்கை மாவட்ட நீர் ஆதாரத்திற்கு ஏற்ற வகையில் மாற்றுப்பயிர் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சில விவசாயிகள் மாற்று விவசாயமாக மரவள்ளி, சர்க்கரை வள்ளி, உள்ளிட்டவற்றை செய்து அதில் லாபம் அடைந்து வருகின்றனர். மரவள்ளிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு அதிகமான நீர் பாய்ச்ச தேவையில்லை. இதுபோல் மானாவாரி பயிர்களான பருப்பு மற்றும் பயறு வகைகள், காளான் வளர்ப்புத்தொழிலையும் லாபகரமானதாய் செய்து வருகின்றனர். இவை மட்டுமின்றி நீர் குறைவாக பயன்படுத்தப்படும் மாற்றுப்பயிர்கள் பயிர் செய்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விவசாயிகள் கூறுகையில், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து வருகிறது. மழை பெய்யவில்லை, போதிய நீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை, எனவே நீர் தேவை குறைவான பயிர்களே இம்மாவட்டத்திற்கு ஏற்றதாகும். அதுபோன்ற பயிர்களை தேர்வு செய்து பயிரிட்டால் நஷ்டம் ஏற்படாது.  சேலம், நாமக்கல் உள்ளிட்ட மழை குறைவான மாவட்டங்களில் நீர் பற்றாக்குறையால் மரவள்ளி உள்ளிட்ட மானாவரி பயிர்கள் பயிரிடப்படுகிறது. மாற்று விவசாயம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Tags : Sivagangai district ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...