×

சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்: விடியவிடிய நடந்த சோதனையால் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் விடிய விடிய வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இது வழக்கமாக வரும் புரளிதான் என்று தெரியவந்தது. இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலைய மேலாளர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு ஒரு மர்ம இ-மெயில் வந்தது.

அதில் சென்னை விமான நிலையத்தில் உள்ள குப்பை தொட்டிகளில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. சக்தி வாய்ந்த அந்த குண்டுகள் வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பரபரப்படைந்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குனருக்கு அவசரமாக தகவல் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில், விமான நிலைய அவசரகால பாதுகாப்பு குழு கூட்டம் நள்ளிரவில் நடந்தது.

கூட்டத்தில் விமான நிலைய உயர் அதிகாரிகள், பிசிஏஎஸ் அதிகாரிகள், சிஐஎஸ்எப் அதிகாரிகள், விமான நிறுவன உயர் அதிகாரிகள், விமான நிலைய காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் உடனடியாக, சென்னை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி சென்னை விமான நிலையத்தில், நள்ளிரவு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவிகளுடன் தீவிர சோதனைகள் மேற்கொண்டனர். சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி சோதனையிடப்பட்டது. அதோடு பயணிகளுக்கு கூடுதலாக, விமானத்தில் ஏறும் போது ஒரு சோதனை நடத்தப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் உள்ள குப்பை தொட்டிகள் போன்றவைகளையும், வெடிகுண்டு நிபுணர்கள் துருவி துருவி சோதனை நடத்தினர்.

விமானத்தில் ஏற்றப்படும் பார்சல்கள், பயணிகள் உடைமைகள் போன்றவைகளும் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டன.  இதுபோல் சென்னை விமான நிலையம் முழுவதும் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய சோதனைகள் நடந்தன. ஆனால் வெடிகுண்டுகளோ மற்றும் சந்தேகத்துக்கிடமான பொருட்களோ எதுவும் இல்லை. எனவே இது வழக்கமாக வரும் வெடிகுண்டு புரளிதான் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர். அதோடு இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து, சென்னை விமான நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, இந்த புரளியை கிளப்பிவிட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Tags : CHENNAI AIRPORT ,Chennai ,Chennai Airport Police ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு