திருவாரூரில் பாதாள சாக்கடை அடைப்பை விரைவில் சரிசெய்ய வேண்டும்

திருவாரூர், டிச.25: திருவாரூரில் பாதாளசாக்கடை அடைப்பு பணி சீரமைப்பு தொடர்பாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் நகரில் 50 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்திற்காக சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மேனுவல் தொட்டிகளில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு அதனை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் வடக்கு வீதி அருகே புதுத்தெருவில் மேனுவல் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அதனை சரிசெய்யும் பணி கடந்த 2 தினங்களாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சாலையின் இருபுறங்களிலும் பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருவாரூரில் இருந்து பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் மயிலாடுதுறை செல்வதற்கு பிரதான சாலையாக இந்த சாலை இருந்து வருவதால் மாற்று பாதையான பிடாரி கோவில் தெரு வழியாக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. குறுகலான சாலையான இந்த சாலையில் வாகனங்கள் இருபுறமும் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் துன்பப்பட வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>