×

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நான் இல்லை; மாவட்ட செயலாளர் மதியழகன் தான் : தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைவிரிப்பு

மதுரை : நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நான் இல்லை; மாவட்ட செயலாளர் மதியழகன்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிராமன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற வாதங்கள் பின்வருமாறு..

மனுதாரர் தரப்பு : சொந்த கட்சி தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கரூரில் நடந்தது விபத்து. திட்டமிட்ட செயல் அல்ல. விஜயை பார்க்க கூடியவர்களை காவல்துறை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.வேண்டுமென்றே காக்க வைத்து தாமதமாக வந்தது போல் சொல்கிறார்கள். 7 மணி நேரம் தாமதமாக வந்ததற்கு வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்…தாமதமாக வந்தது குற்றமா?

மனுதாரர் தரப்பு : போலீஸ் மீது பழி போடவில்லை. குற்றம்தான் சுமத்துகிறோம். வேலுச்சாமிபுரம் சரியான இடம் இல்லை என நினைத்திருந்தால் அனுமதி மறுத்திருக்க வேண்டும். கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்துவிட்டனர். கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும்.சட்டம்-ஒழுங்கை ஒழுங்குப்படுத்துவது காவல்துறையின் கடமை.

அரசு தரப்பு : எந்தவித சாட்சிகளும் ஆவணங்களும் இல்லாமல் குற்றம் சுமத்துவதை ஏற்கமுடியாது. கூட்டம் அதிகமாக இருந்ததால், கூட்டத்தை ரத்து செய்ய காவல்துறையிடம் மதியழகன் தெரிவித்திருக்கலாம்.

நீதிபதி : உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் நிலையை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனும்போது அதற்கான பொறுப்பு ஏற்க வேண்டும்தானே?.

புஸ்ஸி ஆனந்த் தரப்பு : நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நான் இல்லை; மாவட்ட செயலாளர் மதியழகன்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மதியழகன், அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய முடியாது.

அரசு தரப்பு : கூட்ட நெரிசலுக்கு காரணமானவர் யார் என கண்டறிய விசாரணை தேவை. தவெக பொதுச் செயலாளர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவில்லை. கூட்ட நெரிசலை தடுக்க எந்த அறிவிப்பும் செய்யவில்லை. எந்தவித அனுமதியின்றி 23 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தப்பட்டது. கூட்ட நெரிசலை தடுக்க கட்சி சார்பில் எந்த முன்னெற்பாடுகளும் செய்யவில்லை. சம்பவம் நடைபெற்றவுடன் தவெகவினர் தப்பியோடிவிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களை தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது. இன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளதால் நீதிமன்ற இணையதளத்தில் மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags : District Secretary ,Mathiyazhagan ,Teva General Secretary ,Pussy Anand ,Madurai ,Karur Teva stampede incident ,Teva Joint Secretary… ,
× RELATED தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு நாளை...