×

திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் நிறைவு; தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மற்றும் இரவில் தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் வலம் வந்து அருள்பாலித்தனர். முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை உற்சவம் கடந்த மாதம் 28ம்தேதி நடந்தது. 8ம்நாளான நேற்று காலை மகா தேரோட்டம் நடைபெற்றது. தேரில் மலையப்பசுவாமி தேவி, பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தனர். இரவு உற்சவத்தில் மலையப்பசுவாமி கல்கி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் மாட வீதிகளில் பவனி வந்தார்.

பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமியும், சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலுக்கு வந்தனர். அங்குள்ள மண்டபத்தில் தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசுவாமிக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு சிறப்பு பொருட்கள் மூலம் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் (புஷ்கரணி) சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் மலையப்பசுவாமிக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் புனித நீராடினர்.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு தெப்பக்குளத்தில் புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். இன்றிரவு ஏழுமலையான் கோயில் முன் உள்ள தங்க கொடிமரத்தில் இருந்து கருடன் கொடி இறக்கப்பட உள்ளது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

Tags : Thirupathi Temple Brahmorshavam ,Chakarathalwar Tirthwari ,Thepakulam ,Thirumalai ,Chakarathalwar ,Thirthwari ,Theppakulam ,Thirupathi Elumalayan Temple Brahmorsavam ,Brahmorsavam ,Tirupathi Yemalayan ,Temple ,
× RELATED காற்று மாசு அதிகரிப்பை கருத்தில்...