×

காதலித்து திருமணம் செய்த தம்பதி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சைந்தவிக்கு விவாகரத்து: சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவியை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாங்கள் இருவரும் பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர்.

இதை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த குடும்பநல நீதிமன்றம் இருவரும் முடிவெடுக்க 6 மாதங்கள் அவகாசம் வழங்கியிருந்தது. அவகாசம் முடிவடைந்த நிலையில் கடந்த 25ம் தேதி குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி செல்வசுந்தரி முன்பு ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினர்.

அப்போது, நீதிபதியிடம் சைந்தவி, ஜி.வி.பிரகாஷ் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் பிரிந்து வாழவே விரும்புவதாக தனித் தனியாக கூண்டில் ஏறி தெரிவித்தனர். அப்போது, உங்களின் பெண் குழந்தையை யார் கவனித்துக்கொள்ள போகிறீர்கள் என்று நீதிபதி இருவரிடமும் கேட்டார்.

குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்ள தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விவகாரத்து கோரிய மனு மீது செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளிப்பதாக கூறி விசாரணையை தள்ளி வைத்தார். இந்த நிலையில் நேற்று ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோருக்கு குடும்பநல நீதிமன்ற நீதிபதி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.

Tags : G. V. ,Prakash Sainthavi ,Chennai ,G. V. Prakash ,Sainthavi ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து